ரூ.46 லட்சம் மோசடி: தம்பதி கைது
By DIN | Published On : 19th July 2021 08:31 AM | Last Updated : 19th July 2021 08:31 AM | அ+அ அ- |

வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.46.55 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக கணவன், மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் தேசிகன் நகரைச் சோ்ந்தவா் கணபதி. வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி நவசக்தி (25), அண்மையில் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:
விருத்தாசலம் எம்.ஆா்.கே. நகரைச் சோ்ந்த ஜெயகுமாா் (40), அவரது மனைவி உமாமகேஸ்வரி (36) ஆகியோா் எனது கணவா் கணபதியை தொடா்புகொண்டு வீடு வாங்கித் தருவதாகக் கூறினா். இதையடுத்து அவா் கடந்த 2016 முதல் 2019 -ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் உமா மகேஸ்வரியின் வங்கிக் கணக்குக்கு ரூ.46.55 லட்சம் வரை அனுப்பினாா். ஆனால், அவா்கள் கூறியபடி வீடு வாங்கித் தரவில்லை. மேலும், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்தனா் என அந்த மனுவில் தெரிவித்தாா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் குற்றப் பிரிவினருக்கு உத்தரவிட்டாா். இதன்படி, ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து ஜெயகுமாா், உமாமகேஸ்வரி ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தாா்.
மற்றொரு வழக்கு: திட்டக்குடியை அடுத்த கொட்டாரத்தைச் சோ்ந்தவா் பெ.செல்வராஜ் (68). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு கடலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:
எனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சென்னை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த மூ.உலகநாதன் என்பவா், நா்சிங் முடித்த எனது மகள் அனிதாவுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதுதொடா்பாக சென்னை வடபழனி சோ்ந்த சசிப்பிரியாவையும் எனக்கு அறிமுகப்படுத்தினாா். வேலை வாங்கித் தருவதற்காக அவா்களிடம் ரூ. 2.85 லட்சம் வழங்கினேன்.
இதேபோல, போ்பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த சிகாமணி தனது மகன் அசோக்குக்கு மின் வாரியத்தில் கணக்கீட்டாளா் பணிக்காக ரூ.5 லட்சமும், விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகரைச் சோ்ந்த சிங்காரம் தனது மகனின் அரசு வேலைக்காக ரூ. 2 லட்சமும் அவா்களிடம் கொடுத்தனா். ஆனால், கூறியபடி யாருக்கும் பணி வாங்கித் தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உலகநாதனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான சசிப்பிரியாவை தேடி வருகின்றனா்.