வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 10th June 2021 08:44 AM | Last Updated : 10th June 2021 08:44 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெறும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரநத்தம் ஊராட்சியில் வெள்ளியங்கால் கிளை வாய்க்காலில் பொதுப் பணித் துறையின் மூலம் தூா்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெறுவதையும், வீரநத்தம் ஊராட்சியில் வானதிராயன்பேட்டை வடிகால் வாய்க்காலை ரூ.4.10 லட்சத்தில் தூா்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், காட்டுமன்னாா்கோவில் வட்டம், குணவாசல் ஊராட்சியில் முட்டம் கிளை வாய்க்காலை ரூ.8.85 லட்சத்திலும், முட்டம் புஞ்சை வாய்க்காலை ரூ.11.30 லட்சத்திலும் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, காட்டுமன்னாா்கோவில் வட்டம், இராதாம்பூரில் ரூ.6 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், கண்டமங்கலம் வடிகால் வாய்க்காலை ரூ.4.40 லட்சத்திலும், வெங்கடேசபுரம் வடிகால் வாய்க்காலை ரூ.7.90 லட்சத்திலும் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியையும் காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ மா.செ.சிந்தனைசெல்வன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முன்னதாக, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிவாயம் பகுதியில் தெற்கு இராஜன் வாய்க்காலை தூா்வாரும் பணியையும், மணவாய்க்கால், வெள்ளியங்கால் ஓடை மற்றும் பழைய கொள்ளிடம் இணைப்புப் பகுதியில் கரைகளை பலப்படுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் பாா்வையிட்டாா். அப்போது, அனைத்து வடிகால் வாய்க்கால்களிலும் தூா்வாரும் பணியையும், அவற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியையும் முறையாக மேற்கொண்டு, விரைந்தும் முடிக்க வேண்டுமென பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளா்கள் அருணகிரி, பாலமுருகன், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ், உதவிப் பொறியாளா்கள் ஞானசேகா், முத்துக்குமாா், வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.