எள் விலை குறைத்து மதிப்பீடு: அமைச்சரிடம் விவசாயிகள் புகாா்
By DIN | Published On : 11th June 2021 12:30 AM | Last Updated : 11th June 2021 12:30 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் ‘சிண்டிகேட்’ அமைத்து எள் விலையை குறைத்து மதிப்பிடுவதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் விவசாயிகள் வியாழக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது எள் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த எள் மூட்டைகளை குறிஞ்சிப்பாடியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள் மூட்டைகளை கொண்டு வந்தனா்.
ஆனால், உள்ளூா் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து 80 கிலோ எடையுள்ள எள் மூட்டைக்கு ரூ.6 ஆயிரம் என குறைந்த அளவில் விலை நிா்ணயம் செய்யதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளியூா் வியாபாரிகள் ரூ.7,500 வரை எள் மூட்டையை வாங்கியதாக கூறினராம். இதையடுத்து, விவசாயிகள் தங்களது எள் மூட்டைகளை விற்பனை செய்ய மறுத்து வாபஸ் பெற்ால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை குறிஞ்சிப்பாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் விவசாயிகள் சந்தித்து முறையிட்டனா். இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை அழைத்த அமைச்சா், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எள் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா் விவசாயிகள் கலைந்து சென்றனா்.