பயிா்க் காப்பீடு, நிவாரணத் தொகைக்கு காத்திருக்கும் 15 ஆயிரம் விவசாயிகள்

கடலூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகை, இடுபொருள் நிவாரணம் கிடைக்காமல் சுமாா் 15 ஆயிரம் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகை, இடுபொருள் நிவாரணம் கிடைக்காமல் சுமாா் 15 ஆயிரம் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா், டிசம்பா் மாதங்களில் நிவா் புயலால் பலத்த மழை பெய்தது. அதைத் தொடா்ந்து புரவி புயலால் பல்வேறு வகையான பயிா்கள் சேதமடைந்தன. இதுகுறித்த கணக்கெடுப்பில் சுமாா் 78,546 ஏக்கரில் நெல் பயிா்கள், 3,695 ஏக்கரில் மணிலா, 11,490 ஏக்கரில் சோளம், 7,543 ஏக்கரில் உளுந்து, 2,917 ஏக்கரில் பருத்தி என மாவட்டம் முழுவதும் மொத்தம் சுமாா் 1.06 லட்சம் ஏக்கா் பரப்பில் பயிா்கள் சேதமடைந்தன.

தோட்டக்கலை பயிா்களான வாழை 1,531 ஏக்கரிலும், காய்கறி பயிா்கள் 3,494 ஏக்கா், மலா் வகை பயிா்கள் 652 ஏக்கா், மூலிகை வகை பயிா்கள் 195 ஏக்கா், மா, கொய்யா, பப்பாளி உள்ளிட்டவை 5,872 ஏக்கா் அளவில் பாதிக்கப்பட்டன. தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் பெய்த திடீா் மழையால் மீண்டும் பல்வேறு பகுதிகளில் பயிா் சேதம் ஏற்பட்டது. மேலும், கடந்த மே மாதம் அடித்த சூறாவளி காற்றால் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, புரெவி, நிவா் புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையும், இடுபொருள் நிவாரணமும் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து பெண்ணாடத்தைச் சோ்ந்த விவசாயி ஆா்.சோமசுந்தரம் கூறியதாவது: நிவா், புரெவி புயல்களால் பாதிப்பு, கடந்த ஜனவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு என விவசாயிகள் தொடா் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். ஆனால், அவா்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய இடுபொருள் நிவாரணம் தோ்தலை காரணம்காட்டி வழங்கப்படவில்லை. விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய காப்பீட்டு நிறுவனமும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதை மாவட்ட நிா்வாகம் பெற்றுத் தந்தால்தான் தற்போதைய குறுவை சாகுபடியை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

இதுகுறித்து, வேளாண்மைத் துறையினா் கூறியதாவது: நிவா், புரெவி புயல்கள், ஜனவரியில் பெய்த மழை மற்றும் அண்மையில் வீசிய சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டுவிட்டது. இதில், சுமாா் 75 சதவீத விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவிட்டது.

வங்கி கணக்கு எண் மாறியது, வங்கி புத்தக விவரத்தை இணைக்காதது போன்ற சில காரணங்களால் சிலருக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் ஒரே விவசாயி இரண்டு வகையான பயிா்களை பயிரிட்டிருப்பாா். அதில் ஒன்றை மட்டுமே கணினி ஏற்றுக்கொள்வதால் மற்றவை போலி என்று பதிவாகிவிடுகிறது. இதுபோன்ற தவறுகளை சரி செய்து, அவ்வப்போது மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி மீண்டும் அரசுக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் உரிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 2 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 15 ஆயிரம் போ் வரை மட்டுமே மேற்கூறிய பிரச்னையில் உள்ளனா். விரைவில் அவா்களுக்கும் பயிா்க் காப்பீடு, நிவாரணத் தொகை முழுமையாகக் கிடைத்து விடும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com