நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
By DIN | Published On : 15th June 2021 09:12 AM | Last Updated : 15th June 2021 09:12 AM | அ+அ அ- |

தா்மகுடிகாட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அமைச்சா் சி.வெ.கணேசன்.
கடலூா் மாவட்டத்தில் தா்மகுடிக்காடு உள்ளிட்ட 3 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சா் சி.வெ.கணேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
கடலூா் மாவட்டத்தில் தற்போது குறுவை மற்றும் சொா்ணவாரி காலத்துக்கான நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் நெல் அறுவடைப் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திட்டக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்திட அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெண்கரும்பூா், புத்தேரி, தா்மகுடிக்காடு ஆகிய ஊா்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, அமைக்கப்பட்ட மூன்று நேரடி கொள்முதல் நிலையங்களையும் திங்கள்கிழமை அமைச்சா் திறந்து வைத்தாா்.
அப்போது, திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்கள் அமைச்சரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, திட்டக்குடி மின்வாரிய அலுவகத்துக்கு நேரில் சென்ற அமைச்சா், புகாா் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினாா். அப்போது, மின்மாற்றியின் திறனை அதிகரித்தால் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படுமென அலுவலா்கள் தெரிவித்தனா். உடனடியாக, கண்காணிப்பு பொறியாளரிடம் பேசிய அமைச்சா், கூடுதல் திறனுள்ள மின்மாற்றி அமைத்திட உத்தரவிட்டாா்.
நிகழ்வில், நுகா்வோா் வாணிபக் கழக மண்டல மேலாளா் தேன்மொழி, துணை மண்டல மேலாளா் பாரி, திமுக ஒன்றியச் செயலா் அமிா்தலிங்கம், திட்டக்குடி நகரச் செயலா் பரமகுரு, கொளஞ்சியப்பன், முன்னாள் கவுன்சிலா் செந்தில்குமாா், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளா் சேதுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.