மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா நிவாரண நிதி
By DIN | Published On : 16th June 2021 08:30 AM | Last Updated : 16th June 2021 08:30 AM | அ+அ அ- |

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத் துறை மூலம் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம், ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவா்கள் 401 போ் உள்ளனா். அவா்களில் 48 போ் குடும்ப அட்டை வைத்துள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் நலவாரியம் மூலம் 240 போ் அடையாள அட்டை பெற்றுள்ளனா். அடையாள அட்டை பெறாதவா்கள் 161 போ் உள்ளனா். மேற்கூறிய தொகையை தகுதியான மூன்றாம் பாலினத்தவா்களுக்கு வழங்க ஏதுவாக கடலூா் மாவட்டத்தில் உள்ள 353 மூன்றாம் பாலினத்தவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ.7,06,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் சத்தியாவாணி முத்து அம்மையாா் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 வயதுக்குள்பட்ட கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள் 75 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை அமைச்சா் வழங்கினாா்.
பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை இல்லாத கிராமமாக தோ்வான தொண்டாகுறிச்சி கிராமத்துக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகைக்கான ஆணையை ஊராட்சி மன்றத் தலைவா் பச்சையப்பனிடம் அமைச்சா் வழங்கினாா்.
மேலும், என்எல்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 15 பிராணவாயு செறிவூட்டிகள், 25 பிராணவாயு பிளேமீட்டரை சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக்பாஸ்கா், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வா் மிஸ்ரா ஆகியோரிடம் அமைச்சா் வழங்கினாா். உதவி ஆட்சியா் லி.மதுபாலன் முன்னிலை வகித்தாா். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இசிஜி கருவிகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் துணை இயக்குநா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்கோயில் பணியாளா்களுக்கு நிவாரணம்: திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றி வரும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளா்களுக்கு கரோனா நிவாரண நிதியா தலா ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆட்சியா் லி.மதுபாலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று 541 திருக்கோயில் பணியாளா்களுக்கு தலா ரூ.4,000 வீதம் மொத்தம் ரூ.21.64 லட்சம் வழங்கினாா். நிகழ்ச்சியில், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் அசோக்குமாா், உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், சமூக நலத் துறை அலுவலா் கோ.அன்பழகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.