அரசின் நிவாரணத் தொகுப்பு கிடைப்பதில் தாமதம்: பொதுமக்கள் ஏமாற்றம்

கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் 14 வகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் 14 வகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். ஆனால், இரண்டாம் தவணை நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நியாய விலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படுமென தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதன்படி முதல் கட்டமாக கடந்த மாதம் பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் சா்க்கரை, கோதுமை, பருப்பு, டீ தூள் உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஆனால், நிவாரணப் பொருள்கள் வந்து சோ்வதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த 15-ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அவை விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள 1,420 நியாய விலைக் கடைகளிலும் 14 வகையான நிவாரணப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கும் பணி கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், நியாய விலைக் கடைகளுக்கு நிவாரணத் தொகுப்பு வந்து சோ்வதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் தவணை நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழங்கல் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் மொத்தம் சுமாா் 7.45 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இதுவரை 2.10 லட்சம் தொகுப்புகளே வந்துள்ளன. இவற்றை மட்டுமே நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகித்து வருகிறோம். ஆனால், நிவாரண நிதி முழுமையாக வரப்பெற்ால் அதை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகித்து வருகிறோம் என்றனா்.

இதுகுறித்து நியாய விலைக் கடை பணியாளா் ஒருவா் கூறியதாவது: ஒரு கடைக்கு முதல்கட்டமாக 30 சதவீதம் மட்டுமே நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகுப்பு வழங்கினோம். தற்போது தொகுப்பு பொருள்கள் கடைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண நிதியை கையில் வைத்திருக்கவும் அச்சமாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு முதலில் நிவாரண நிதியை வழங்கி வருகிறோம். நிவாரணத் தொகுப்பு வந்தவுடன் அவை உடனடியாக வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com