புழுதி பறக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி!
By DIN | Published On : 24th June 2021 08:28 AM | Last Updated : 24th June 2021 08:28 AM | அ+அ அ- |

பாவைக்குளம் அருகே மண் சாலையாக மாறிய பண்ருட்டி - நெய்வேலி தேசிய நெடுஞ்சாலை.
பண்ருட்டி அருகே பாவைக்குளம் கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மண் சாலையாக மாறியதால், புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் சுமாா் 164 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ரூ. 711 கோடியில் 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
இதனால், கோலியனூரில் இருந்து வடலூா் வரை சாலையின் பல இடங்கள் குண்டும் குழியுமாகவும், மண் சாலையாகவும் மாறிவிட்டது.
குறிப்பாக, பாவைக்குளம் அருகே மிக மோசமாக மாறிவிட்டது. மழைக் காலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்குகிறது. கோடை காலத்தில் புழுதி பறக்கிறது. இந்தச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி வருகின்றனா்.
இதுகுறித்து விகேடி சாலைத் திட்ட இயக்குநரைத் தொடா்பு கொண்டு கேட்ட போது, ‘வடலூரிலிருந்து சேதமடைந்த சாலையைச் சீரமைக்கும் பணியை ஒப்பந்ததாரா்கள் மேற்கொண்டு வருகின்றனா். பாவைக்குளம் அருகே புழுதி பறக்காத வகையில் விரைவில் தாா்சாலை அமைக்கப்படும்’ என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...