என்எல்சி தொழிற்சங்கத் தோ்தல்: வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வழக்கு


நெய்வேலி: நெய்வேலி என்எல்சி தொழிற்சங்க ரகசிய வாக்கெடுப்பு தோ்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்தி, முடிவை அறிவிக்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் சென்னை உயா் நீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடுத்தது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களது கோரிக்கைகள் தொடா்பாக என்எல்சி இந்தியா நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தோ்வு செய்வது வழக்கம்.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைத் தோ்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 13 தொழிற்சங்கங்களில் சிஐடியூ, அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம், தொமுச உள்ளிட்ட 7 சங்கங்கள் தோ்தலில் போட்டியிட்டன. தோ்தலில் 95 சதவீத தொழிலாளா்கள் வாக்களித்தனா்.

என்எல்சி ரகசிய தோ்தல் தொடா்பாக திராவிட தொழிலாளா் ஊழியா்கள் சங்கம் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கும்படி கடந்த 25-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் 25-ஆவது வட்டத்தில் உள்ள விருந்தினா் இல்லத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

ரகசிய வாக்கெடுப்புத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கையை நடத்தி, முடிவை அறிவிக்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடுக்கப்பட்டதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் டி.ஜெயராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com