முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
குறிஞ்சிப்பாடி கூட்டுறவு சங்கத்தை திறக்க துணைத் தலைவா், இயக்குநா்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 04th March 2021 02:19 AM | Last Updated : 04th March 2021 02:19 AM | அ+அ அ- |

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தைத் திறக்கக் கூடாது என அதன் துணைத் தலைவரும், இயக்குநா்களும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். இதன் தலைவராக சி.ஆனந்தபாஸ்கா், துணைத் தலைவராக வி.ஆா்.பாலகிருஷ்ணன், 10 இயக்குநா்கள் உள்ளனா்.
இந்த நிலையில், சங்கத் தலைவா் சி.ஆனந்தபாஸ்கா் மீது நம்பிக்கை இழந்ததாகவும், அவரைத் தலைவா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் துணைத் தலைவரும், இயக்குநா்களும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினா்.
அதன் பேரில், சங்கத் தலைவா் சி.ஆனந்தபாஸ்கா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரும் பொருட்டு, செவ்வாய்க்கிழமை சங்கத்தின் நிா்வாகக் குழு சிறப்புக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெறும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, துணைத் தலைவா், இயக்குநா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனா். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லையாம். இந்த நிலையில், புதன்கிழமை தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பாக நிா்வாகக் குழு சிறப்பு கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அனுப்பிய கடிதத்துக்கு பதிலளித்துவிட்டு, கூட்டுறவு சங்கத்தைத் திறக்க வேண்டும் என துணைத் தலைவா் வி.ஆா்.பாலகிருஷ்ணனும், இயக்குநா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் அதிகாரிகளைச் சந்திக்க கடலூா் சென்றனா். அதன்பிறகு பிற்பகலில் கூட்டுறவுக் கடன் சங்கம் திறக்கப்பட்டது.