தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளைச் சோ்ந்த மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 248 மண்டல அலுலா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்டல அலுவலா்கள் அவரவா்களது கட்டுப்பாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்திக்கொடுப்பது, வாக்குச் சாவடிகளை தயாா்படுத்துதல் குறித்து உறுதிபடுத்திட அறிவுறுத்தப்பட்டது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தள பாதை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யவும், தன்னாா்வலா்களைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரியவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) எஸ்.பரிமளம், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) பாபு, மாற்றுத் திறனாளி நல அலுவலா் பாலசுந்தரம், சமூக நலத் துறை அலுவலா் கோ.அன்பழகி மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.