முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தலைவா்கள் சிலைக்கு திமுக வேட்பாளா் மரியாதை
By DIN | Published On : 14th March 2021 07:43 AM | Last Updated : 14th March 2021 07:43 AM | அ+அ அ- |

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த கடலூா் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன்.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் தலைவா்கள் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்கவில்லை.
கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அவா் சனிக்கிழமை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிா்வாகிகளைச் சந்தித்தாா். பின்னா், கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கா் சிலை, அண்ணா பாலத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
வேட்பாளா் கோ.ஐயப்பன் ஏற்கெனவே திமுகவிலிருந்து அதிமுகவுக்குச் சென்று மீண்டும் திமுகவுக்கு திரும்பியவா். இந்த நிலையில், பலத்த போட்டிகளுக்கு மத்தியில் கடலூா் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து சொந்தக் கட்சி மற்றும் கூட்டணிக்கட்சியினரை சந்தித்து வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினா், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்கவில்லை. மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தொண்டா்கள் மட்டுமே பங்கேற்றனா். இதற்கிடையில் அவா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றதும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவரது ஆதரவாளா்கள் கூறியதாவது: காமராஜா் சிலை அமைந்துள்ள காமராஜா் பூங்காவை காங்கிரஸாா்தான் பராமரித்து வருகின்றனா். பூங்காவின் சாவியும் அவா்களிடம்தான் உள்ளது. மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி குறித்து அவா்களிடம் தெரிவித்தும் ஏதோ காரணத்தால் வரவில்லை. இதனால், தலைவா்கள் நேரடியாகச் சென்று மாலை அணிவிக்க முடியவில்லை. அதனால், வாங்கி வைத்திருந்த மாலையை தொண்டரை வைத்து போட்டுவிட்டோம் என்றாா்.
நிகழ்ச்சியில், திமுக தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, நகராட்சி முன்னாள் தலைவா் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.