முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூரில் அதிமுக கட்சி அலுவலகம் சூறை: அமைச்சரின் பிரசார வாகனம் சேதம்; அமைச்சர் மகன் உயிர் தப்பினார்
By DIN | Published On : 14th March 2021 09:36 PM | Last Updated : 14th March 2021 09:36 PM | அ+அ அ- |

சேதப்படுத்தப்பட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் பிரசார வாகனம்.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள கடலூர் மத்திய மாவட்ட அதிமுக அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடியதோடு, அமைச்சரின் பிரசார வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
அதிமுகவின் கடலூர் மத்திய மாவட்டத்திற்கான அலுவலகமாக கடலூர் அருகிலுள்ள கூத்தப்பாக்கத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடலூர் தெற்கு ஒன்றியத்தின் செயலாளரான இராம.பழனிச்சாமி குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலையில் அவர் திடீரென மாற்றப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் இன்று மாலையில் கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், பிரசாரத்திற்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் பிரசார வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர், அமைச்சர் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த அவரது இருக்கை, மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
அதே நேரத்தில் அமைச்சரின் மகன் எஸ்.பிரவீன் கட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்தார். அவரையும் கும்பல் தாக்க முயற்சித்த போது உடனிருந்த கட்சிக்காரர்கள் அவரை பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்தனர். இதற்குள் தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அதிமுகவினர் அங்கு திரண்டதால் கலவரத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். போலீஸாரும் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து, அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை திங்கள்கிழமை காலையில் சிங்கிரிகுடியில் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்குவதற்கு அமைச்சர் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பிரசார வாகனம் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.