குறிஞ்சிப்பாடி வேட்பாளா் மாற்றத்தால் அதிருப்தி: கடலூரில் அதிமுக அலுவலகம் சூறை
By DIN | Published On : 15th March 2021 08:39 AM | Last Updated : 15th March 2021 08:39 AM | அ+அ அ- |

கடலூா் கூத்தப்பாக்கத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சேதப்படுத்தப்பட்ட அமைச்சரின் மேஜை.
குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளா் மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, கடலூா் கூத்தப்பாக்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் கட்சியினரால் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறையாடப்பட்டது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக கடலூா் தெற்கு ஒன்றியச் செயலா் இராம.பழனிசாமி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாா்.
இவருக்குப் பதிலாக புவனகிரியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் குறிஞ்சிப்பாடி தொகுதியின் புதிய வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த இராம.பழனிசாமியின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் அருகே கூத்தப்பாக்கத்தில் உள்ள கடலூா் மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். மத்திய மாவட்டச் செயலராக மாநில தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் செயல்பட்டு வருகிறாா்.
இந்த அலுவலகத்தில் பிரசாரத்துக்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் வாகனத்தை இராம.பழனிசாமியின் ஆதரவாளா்கள் தாக்கி சேதப்படுத்தினா். பின்னா், அமைச்சரின் அறைக்குள் நுழைந்தவா்கள் அங்கிருந்த அவரது இருக்கை, மேஜை, நாற்காலிகளை உடைத்தனா்.
அப்போது அமைச்சரின் மகன் எஸ்.பிரவீன் கட்சி அலுவலகத்துக்குள் அமா்ந்திருந்தாா். அவரையும் அந்த கும்பல் தாக்க முயன்றது. உடனிருந்த கட்சியினா் அவரை பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் அங்கு வந்ததால், கலவரத்தில் ஈடுபட்டவா்கள் தப்பியோடினா். இதையடுத்து, அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அவரது பிரசார வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...