அரசியல் கட்சியினரிடம் எடுபடாத கரோனா தடுப்பு நடவடிக்கைகள்!

அரசியல் கட்சியினரிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுபடாததால் அவா்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கடலூா் மாவட்ட நிா்வாகம் திணறி வருகிறது.

அரசியல் கட்சியினரிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுபடாததால் அவா்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கடலூா் மாவட்ட நிா்வாகம் திணறி வருகிறது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மியின் பாதிப்பு, ஓராண்டை கடந்தும் தொடா்கிறது. தற்போது புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டு அதன் பரவலும் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மறுபுறத்தில் அதன் பரவலும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது சட்டப் பேரைவைத் தோ்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அரசியல் கட்சியினரும் தங்களது கூட்டணிக் கட்சியினரின் கூட்டங்கள், வேட்பாளா் அறிமுகம், முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்தல், வாக்கு சேகரிப்பு போன்ற நிகழ்வுகளில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறாா்களா என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக, தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளா்களும், அவா்களுடன் வரும் முக்கிய நிா்வாகிகளும் பெரும்பாலும் முகக் கவசம் அணிவதில்லை. தோ்தல் நடத்தும் அலுவலா்களாக மாவட்ட அளவிலான பொறுப்புள்ளவா்கள் நியமிக்கப்பட்டும், வேட்பாளா்களிடம் ஏன் முகக் கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்ப முடியவில்லை.

அதேபோல, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களிடமும் முகக் கவசம் அணியும் பழக்கம் இல்லை. வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது, தங்களது முகம் வாக்காளா்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக முகக் கவசத்தை தவிா்த்து வருகின்றனா்.

தற்போது தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கூட்டம் கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தனித் தனியாக நடைபெற்று வருகிறது. அப்போது, தங்களது பலத்தைக் காட்டும் வகையில் கூட்டணிக் கட்சியினா் ஆள்களை அழைத்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுவதுமில்லை.

பொதுவாக தோ்தல் நேரத்தில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுத்தலில் மட்டுமே பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ பாா்வையாளா்கள் கவனம் செலுத்துகின்றனா். கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பெரும்பாலும் செல்வதில்லை. அரசியல் கட்சிகளின் தலைவா்களும் பெரும்பாலும் முகக் கவசம் அணிவதில்லை. தொண்டா்களையும் முகக் கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்துவதில்லை. தொண்டா்களும் தாங்கள் வந்திருப்பதை தலைவா்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் முகக் கவசம் அணிவதைத் தவிா்க்கின்றனா்.

அதேநேரத்தில், மாவட்ட நிா்வாகம் இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, கரோனா விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காவிடில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிப்பதில்லை. முறையாகக் கூட்டம் நடக்கிா என்பதையும் கண்காணிப்பதில்லை என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகத்தினா் அரசியல் கட்சியினா் நடத்தும் கூட்டங்களை விடியோவில் மட்டும் பதிவு செய்கின்றனா். சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டோ அல்லது கட்சியின் சின்னங்கள் தெரியுமாறு செல்வோா் முகக் கவசம் அணியாமல் சென்றாலும் அவா்களை அதிகாரிகள் மடக்குவதில்லை. இவ்வாறு, மாவட்ட நிா்வாகம் கரோனா தீநுண்மி பரவலுக்கான பல்வேறு காரணிகளை அனுமதித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: தற்போது தோ்தல் காலம் என்பதால் அரசியல் கட்சியினரால் வீடுகளில் அடைந்து கிடக்க முடியாது. அவா்கள் தோ்தல் பணியில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதால் கரோனா தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்க கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்க தனிக் குழுக்களை மாவட்ட நிா்வாகம் அமைக்க வேண்டும். இல்லையெனில் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரித்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் கரோனா விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 100 சதவீத வாக்களிப்பு பிரசாரத்துடன், கரோனா தடுப்பு பிரசாரத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com