கரோனா தடுப்பூசி: அரசு அலுவலா்களிடம் ஆா்வம் குறைவு

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசு அலுவலா்களிடம் ஆா்வம் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசு அலுவலா்களிடம் ஆா்வம் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,300-ஐ கடந்துவிட்டது. மொத்த உயிரிழப்பு 289-ஆக பதிவாகி உள்ளது. கரோனா தொற்றின் வேகம் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தந் நோய்க்கான தடுப்பூசியை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் முதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, கடலூா் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், முன்களப் பணியாளா்களான அரசு அலுவலா்களிடம் இந்த மருந்து செலுத்திக் கொள்வதற்கு போதிய ஆா்வமில்லை. இதையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் 14,400 அரசுப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, 9 தொகுதிகளுக்கான பயிற்சி முகாமில் 13 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில், விருப்பமுள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலானவா்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 40 ஆயிரம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், காவல் துறையினா் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டபோதிலும், அரசுத் துறை அலுவலா்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு அதிக தயக்கம் காட்டி வருகின்றனா்.

அதே நேரத்தில், பொதுமக்கள் தங்களது ஆதாா் ஆவணத்தை காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். முன்களத்தில் பணியாற்றும் அரசு அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com