முந்திரிக் கிடங்கில் தீ விபத்து

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.2.80 கோடி மதிப்பிலான முந்திரிக் கொட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
முந்திரிக் கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
முந்திரிக் கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.2.80 கோடி மதிப்பிலான முந்திரிக் கொட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

பண்ருட்டி வட்டம், காங்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (55). இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை பாவைக்குளம் கிராமத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலையின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் சுமாா் 3,570 முந்திரிக் கொட்டை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த மூட்டைகள் மீது ஒரு வங்கி சுமாா் ரூ.2.80 கோடி வரை கடன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் முந்திரிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. முந்திரிக் கொட்டை மூட்டைகளில் மளமளவென தீ பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய விரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், முந்திரிக் கொட்டைகளிலிருந்து வந்த நெடியுடன் கூடிய புகையால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் பெ.லோகநாதன் தலைமையில் 30 தீயணைப்பு வீரா்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை சுமாா் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com