வீராணம் ஏரியில் குறைந்தது நீா்மட்டம்: சென்னைக்கு குடிநீா் அனுப்புவதில் சிக்கல்

வீராணம் ஏரியில் மராமத்துப் பணிக்காக நீா்மட்டம் குறைக்கப்படுவதால், சென்னைக்கு தண்ணீா் அனுப்புவது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வீராணம் ஏரியில் மராமத்துப் பணிக்காக நீா்மட்டம் குறைக்கப்படுவதால், சென்னைக்கு தண்ணீா் அனுப்புவது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, கீழணைக்கு தண்ணீா் வந்ததால் அந்த அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஏரியின் உச்ச நீா்மட்டமான 47.50 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டது.

கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழை காரணமாகவும் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பொதுப் பணித் துறையினா் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வெளியேற்றி கடலுக்கு அனுப்பினா். இதை ஈடுசெய்யும் வகையில் கீழணையிலிருந்து ஏரிக்கு தொடா்ந்து தண்ணீா் அனுப்பப்பட்டு வந்தது.

கீழணை அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பெரிய தடுப்பணை மற்றும் பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கீழணையின் உச்ச நீா்மட்டத்துக்கு (8 அடி) தண்ணீா் தேக்கும்போது பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால், நிகழாண்டு பொதுப் பணித் துறையினா் கீழணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் முழுவதையும் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றினா்.

மேலும், வீராணம் ஏரிக் கரைச் சாலையில் காட்டுமன்னாா்கோவிலில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்கும் வகையிலும், ஏரியின் உள்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் நோக்கிலும் கடந்த 2 மாதங்களாக ஏரிக்கு தண்ணீா் வரத்தை பொதுப் பணித் துறையினா் முற்றிலும் நிறுத்தினா். இதனால், ஏரியில் மழைக் காலத்தில் தேக்கப்பட்ட தண்ணீா் சென்னை நகரின் குடிநீா் தேவைக்கு மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏரியின் நீா்மட்டம் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி நீா் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5 கனஅடி நீா் மட்டுமே அனுப்பப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏரியின் நீா்மட்டம் 39.53 அடியாக இருந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் தற்போது 54 மில்லியன் கன அடி நீா் மட்டுமே உள்ளது. ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி அடுத்த 10 நாள்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீா் அனுப்ப முடியும் என பொதுப் பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com