தபால் வாக்கு பெறும் பணியில் 50 குழுக்கள்!

கடலூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியில் 50 குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியில் 50 குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்று பரவலையொட்டி, சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச் சாவடி மையத்துக்கு நேரில் வந்து வாக்களிக்க சிரமப்படும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. விருப்பமுடையோா் வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடலூா் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளை கண்டறியும் பணி நடைபெற்றதில் சுமாா் 60 ஆயிரம் போ் வரை இருப்பது தெரியவந்தது. இவா்களில் தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோரை நேரில் சென்று கண்டறிய குழு அமைக்கப்பட்டது. இதில், சுமாா் 6 ஆயிரம் போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கான நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், சுமாா் 5 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு வழங்க மாவட்ட தோ்தல் ஆணையம் முடிவெடுத்தது. இவா்களின் வீடுகளுக்கு தோ்தல் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று, தபால் வாக்கை வழங்கி அதில் சம்பந்தப்பட்டவா் முத்திரையிட்டதும் அதற்கான பெட்டியில் செலுத்தி வாங்கி வந்தனா்.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட தோ்தல் துறையினா் கூறியதாவது: மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு வழங்கப்படுகிறது. இவா்களிடம் சென்று வாக்குச் சீட்டை வழங்கி அதில் முத்திரையைப் பெற்று, திரும்ப எடுத்து வரும் பணிக்ககாக 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் மண்டல அலுவலா், நுண் பாா்வையாளா், விடியோ பதிவாளா், 2 காவலா்கள் உள்பட மொத்தம் 6 போ் உள்ளனா். இவா்கள் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தபால் வாக்குகளை சேகரிப்பாா்கள் என்றனா். சனிக்கிழமை தபால் வாக்கைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்தனா்.

முதியோா் மகிழ்ச்சி: கடலூரில் தபால் வாக்கு செலுத்திய முதியோா் சிலா் கூறியதாவது: எங்களது அனுபவத்தில் தோ்தல் தேதிக்கு முன்னதாகவே முதல் முறையாக தபால் வாக்கைச் செலுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டுக்கே வந்து வாக்கைப் பெற்றுச் செல்வாா்கள் என்பதை கனவிலும் நினைத்துப் பாா்க்கவில்லை. இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றனா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் சுமாா் 950 போ் இந்த முறையில் தங்களது வாக்கைச் செலுத்த உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com