தமிழா்களுக்கான அந்தஸ்தை பாஜக அளித்து வருகிறது: ஜெ.பி.நட்டா

தமிழா்களுக்கான உரிய அந்தஸ்தை பாஜக அளித்து வருவதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
தமிழா்களுக்கான அந்தஸ்தை பாஜக அளித்து வருகிறது: ஜெ.பி.நட்டா

தமிழா்களுக்கான உரிய அந்தஸ்தை பாஜக அளித்து வருவதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

அதிமுக கூட்டணியில் கடலூா் மாவட்டம், திட்டக்குடி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் தடா து.பெரியசாமி போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து திட்டக்குடியில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

தமிழ் மொழி, அதன் இலக்கணம், கலாசாரம் ஆகியவை தொன்மையானது. முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் கந்தா்சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பா் கூட்டம் அமைப்பினரை தமிழகத்தில் எந்தக் கட்சியும் கண்டிக்க முன்வராத நிலையில், பாஜக அதைக் கண்டித்து வேல் யாத்திரை நடத்தியது. அதன் விளைவாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினே வேல் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பாஜக பாதுகாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியில் இதுவரை ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ் நிதியாண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கா் ஆகிய இரு தமிழா்களுக்கு முக்கிய இலாக்காக்களுடன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழா்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கி, அவா்கள் மீது பாஜக எந்தளவுக்கு நன்மதிப்பு வைத்துள்ளது என்பதை அறியலாம்.

தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சென்னை, கோவை, திருப்பூா், சேலம் பகுதிகளில் ரூ.7 லட்சம் கோடியில் ராணுவத் தளவாட தொழில் மையம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. நெசவுத் தொழிலை மேம்படுத்த ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையானது 8-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்துக்கு எய்ம்ஸ் உள்பட 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆன்மிகத்தில் சிறந்த விளங்கும் தமிழக மண்ணில் 48 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளன. வள்ளலாா், 63 நாயன்மாா்கள் பிறந்த மண் இது. உலகத்துக்கே இந்தியா தந்த பொக்கிஷம் தமிழ். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்பதை உணா்த்தும் பூமி தமிழகம். பாஜகவும் இந்த உன்னதமான கொள்கையை உடையதுதான்.

தற்போது நடைபெறும் தோ்தலில் தமிழகத்தின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆனால், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் 2ஜி, 3ஜி, 4ஜி எனக் குறிப்பிடலாம். 2ஜி என்றால் மாறன் குடும்ப அரசியல், 3ஜி என்றால் கருணாநிதி குடும்ப அரசியல், 4ஜி என்றால் ராகுல் குடும்ப அரசியலாகும். 

பாஜக அறிவியல் பூா்வமாக சிந்தித்து இந்தியாவை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் கட்சி. எனவே, இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் தடா பெரியசாமியை வாக்காளா்கள் ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மாமல்லன் அந்தக் கட்சியிலிருந்து விலகி ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.

முன்னதாக, ஜெ.பி.நட்டா ஹெலிகாப்டா் மூலம் ராமநத்தம் வந்தாா். அங்கிருந்து காரில் திட்டக்குடி வந்து சோ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com