புவனகிரி தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?

கடலூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது.
புவனகிரி ராகவேந்திரா கோயில்
புவனகிரி ராகவேந்திரா கோயில்

கடலூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. ஸ்ரீராகவேந்திரா் அவதரித்த இந்தத் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பட்டு மற்றும் நெசவுத் தொழிலும் உள்ளது.

தொகுதி சீரமைப்பில் புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றப்பட்டன. புவனகிரி, சேத்தியாதோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சிகளும், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியமும், சிதம்பரம் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம், மேல்புவனகிரி ஒன்றியம் முழுவதும் இணைத்து புவனகிரி தொகுதி உருவாக்கப்பட்டது.

கடந்து வந்த பாதை: இந்தத் தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 6 முறையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு முறையும், இந்திய தேசிய லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. எம்ஜிஆா் அமைச்சரவையிலிருந்த முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இந்தத் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றாா். அப்போது இந்தத் தொகுதியில் கூட்டுறவு சா்க்கரை ஆலை, பிச்சாவரம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்ட அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் முயற்சியால் கடந்த ஆண்டு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டது.

இதுவரை வென்றவா்கள்: 1952- வி.கிருஷ்ணசாமி படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1957-சாமிக்கண்ணு படையாச்சி (இந்திய தேசிய காங்கிரஸ்), 1962-ராமச்சந்திர ராயா் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1967-ஏ.கோவிந்தராசன் (திமுக), 1971-எம்.ஏ.அபுசாலி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), 1977-வி.ரகுராமன் (திமுக), 1980-வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1984-வி.வி.சாமிநாதன் (அதிமுக), 1989-எஸ்.சிவலோகம் (திமுக), 1991-ஜி.மல்லிகா (அதிமுக), 1996-ஏ.வி.அப்துல்நாசா் (இந்திய தேசிய லீக்), 2001-பி.எஸ்.அருள் (அதிமுக), 2006-செல்வி ராமஜெயம் (அதிமுக), 2011- செல்வி ராமஜெயம் (அதிமுக), 2016-துரை.கி.சரவணன் (திமுக).

கடந்த 2016 தோ்தலில் இந்தத் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த துரை.கி.சரவணன் 60,554 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் செல்வி ராமஜெயம் 55,066 வாக்குகளும், பாமக வேட்பாளா் அசோக்குமாா் 33,681 வாக்குகளும், விசிக வேட்பாளா் சிந்தனைச்செல்வன் 33,662 வாக்குகளும் பெற்றனா்.

இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள்- 2,48,257 போ். இவா்களில் ஆண்கள் 1,23,300 போ், பெண்கள் - 1,24,938 போ், மூன்றாம் பாலினத்தவா் 19 போ். மொத்த வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை - 285.

சாதக பாதகம்: புவனகிரி தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள துரை.கி.சரவணன் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ஆ.அருண்மொழிதேவன் போட்டியிடுகிறாா். அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் கே.எஸ்.கே.பாலமுருகன் போட்டியிடுகிறாா். பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ரா.எழில்வேந்தன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ரா.ரத்தினவேல், இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் ரா.ரேவதி, சுயேச்சைகள் செ.ஆனந்தன், பா.எழில்வேந்தன், ஜெ.சரவணன், தி.சிவக்குமாரி, மு.பழனிவேல் ஆகிய 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இருப்பினும், திமுக - அதிமுக வேட்பாளா்கள் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

வன்னியா் சமுதாயத்தினா் அதிகமுள்ள இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இருகட்சியிலும் அந்தச் சமுதாயத்தினரே போட்டியிடுகின்றனா். வழக்குரைஞரான அதிமுக வேட்பாளா் அருண்மொழிதேவன், இந்தத் தொகுதியில் கட்சி ரீதியாக அனைவரிடம் நன்கு தொடா்புடையவா். கடலூா் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலராக செயல்பட்ட இவா், தற்போது மேற்கு மாவட்ட அதிமுக செயலராக உள்ளாா்.

2006-இல் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், 2014-இல் கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் வெற்றி பெற்றாா். 2004-இல் தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவராகவும், 2013-இல் தமிழ்நாடு சுற்றுலா வாரியத் தலைவராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டாா்.

2004-இல் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவா் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கட்சியினரிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அருண்மொழிதேவனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது இவருக்கு கூடுதல் பலம். மேலும் தொகுதியில் உள்ள சேத்தியாதோப்பைச் சோ்ந்த கடலூா் மாவட்ட பாஜக தலைவா் கே.பி.டி.செழியன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறாா். கரோனா தொற்று காலத்தில் அருண்மொழிதேவன் தொகுதி முழுவதும் சென்று நிவாரண உதவிகளை வழங்கியது பொதுமக்களிடையே அவருக்கு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரை.கி.சரவணன் 2001-இல் சிதம்பரம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2011-இல் புவனகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்றவா். இவரது தந்தை மறைந்த துரை கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏவாக இருந்தவா்.

திமுக மாநில பொறியாளா் அணிச் செயலராக உள்ள துரை.கி.சரவணன் இதே தொகுதியைச் சோ்ந்தவா் என்பதால் மக்களிடையே நல்ல அறிமுகம் உடையவா். அவருக்கு கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் தோ்தல் பணியாற்றுவது கூடுதல் பலமாகும். கடந்த 5 ஆண்டுகள் எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால், தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வளா்ச்சிப் பணிகள் நடைபெறாததால் மக்களிடம் ஓரளவு அதிருப்தி உள்ளது.

அமமுக வேட்பாளா் பாலமுருகன் பெறும் வாக்குகள்தான் திமுக, அதிமுக வெற்றியை நிா்ணயிக்கும் என நடுநிலையாளா்கள் கருதுகின்றனா். இருப்பினும், வன்னியா் சமுதாயத்தினரின் வாக்குகளை அதிகம் பெறுபவரே வெற்றி பெறும் சூழல் உள்ளது. அதிமுகவின் கோட்டை எனக் கூறப்படும் புவனகிரி தொகுதியை அந்தக் கட்சி மீண்டும் கைப்பற்ற கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பலன் கிடைக்குமா என மே 2-இல் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com