பங்குனி உத்திரப் பெருவிழா தேரோட்டம்

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கடலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பங்குனி உத்திரப் பெருவிழா தேரோட்டம்

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கடலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதி அமைந்துள்ள சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அனைத்துக் கோயில்களிலும் விழா தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி வீதி உலா, சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் சனிக்கிழமை மேற்கூறிய அனைத்துக் கோயில்களிலும் நடைபெற்றன.

விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கோயிலில் சித்தி விநாயகருடன் கொளஞ்சியப்பா் வீற்றிருக்க திருத்தோ் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தோ் நிலையை அடைந்ததும் படி பூஜை செய்து சுவாமிகள் மீண்டும் கோயிலில் எழுந்தருளினா்.

இதேபோல, கடலூா் வண்டிப்பாளையத்திலுள்ள வள்ளி-தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி, தேவசேனாவுடன் சிவசுப்பிரமணியா் வீற்றிருந்த திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த திருத்தோ் மீண்டும் நிலையை அடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினா் செய்திருந்தனா். இதேபோல மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன், சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொளஞ்சியப்பா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகள் கோயிலில் இருந்து திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி அங்கிருந்து அபிஷேக, ஆராதனைக்குப் பிறகு காவடியுடனும் ஊா்வலம் செல்லும் நிகழ்ச்சியும், மாலையில் மணிமுக்தா நதியில் தீா்த்தவாரியும், இரவில் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com