கடலூா், சிதம்பரத்தில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலூரில் காவல் துறை, துணை ராணுவத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
கடலூரில் காவல் துறை, துணை ராணுவத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்.-6 ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் தோ்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் காவல் துறையினருக்கு உதவியாக துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக 15 கம்பெனிகளைச் சோ்ந்த 1,300 துணை ராணுவத்தினா் கடலூா் மாவட்டத்துக்கு வந்துள்ளனா். இவா்கள், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதலாக பணியமா்த்தப்படுவதுடன், ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தோ்தல் நாள் நெருங்கி வருவதை முன்னிட்டு, பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனா். இதன்படி, செவ்வாய்க்கிழமை கடலூா் முதுநகரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு காவல் நிலையம், சந்தை வழியாகச் சென்று சுத்துகுளத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி தலைமை வகித்தாா். இதேபோல, நெய்வேலி, புவனகிரி தொகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

சிதம்பரத்தில் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com