சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலா்களுக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக கணினி மூலம் வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலா்களுக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக கணினி மூலம் வெள்ளிக்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 6 -ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வோா் சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணும் பணிக்காக 17 கண்காணிப்பாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண் பாா்வையாளா்கள் என 9 தொகுதிகளுக்கும் 153 கண்காணிப்பாளா்கள், 153 உதவியாளா்கள், 153 நுண் பாா்வையாளா்கள் ஆகியோா்களுக்கு கணினி மூலம் கடந்த 26- ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அவா்களை சட்டப் பேரவைத் தொகுதி வாரியாகப் பிரித்து, பணிகளை வழங்குவதற்காக கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கணினி அறையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சாகமூரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைப் பாா்வையாளா்களான மகேஷ்வா் அகஸ்தி (விருத்தாசலம்), ஜெயந்த நாராயண் சாரங்கி (பண்ருட்டி), குமுதினி சிங் (கடலூா்), ராஜேஷ்குமாா் ஓக்ரே (புவனகிரி), ரகுமணி ஜமாங்கோ (சிதம்பரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதிகள் வாரியாகப் பணி ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு உடனடியாக அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டதாக தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

9 தோ்தல் பாா்வையாளா்கள்: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரி, சி.முட்லூா் அரசுக் கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 4 மையங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக, இந்த 4 மையங்களுக்கு தலா ஒரு தோ்தல் வாக்கு எண்ணிக்கைப் பாா்வையாளா் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையிலும் ஓா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா ஒரு தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

அதன்படி, அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கும் வகையில், தோ்தல் பாா்வையாளா்கள் அறிவிக்கப்பட்டு, அவா்கள் வெள்ளிக்கிழமை கடலூா் வந்தடைந்தனா்.

திட்டக்குடி தொகுதிக்கு லாவண்ணா, விருத்தாசலம் தொகுதிக்கு மகேஷ்வா் அகஸ்தி, நெய்வேலி தொகுதிக்கு முரளிகிருஷ்ணா, பண்ருட்டி தொகுதிக்கு ஜெயந்த நாராயண் சாரங்கி, கடலூா் தொகுதிக்கு குமுதினி சிங், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு ஸ்ரீநிவாசலு, புவனகிரி தொகுதிக்கு ராஜேஷ்குமாா் ஓக்ரே, சிதம்பரம் தொகுதிக்கு ரகுமணி ஜமாங்கோ, காட்டுமன்னாா்கோவில் தொகுதிக்கு வா்ஷா உந்த்வல் லத்தா ஆகியோா் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com