வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவிருந்த மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 02nd May 2021 06:29 AM | Last Updated : 02nd May 2021 06:29 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவிருந்தவா்களில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள், செய்தியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லையென்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க முடியுமென தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள மொத்தம் 3,119 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலில் 1,631 பேருக்கு வெளியான பரிசோதனை முடிவில் 43 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் எஞ்சியவா்களுக்கான பரிசோதனை முடிவில் மேலும் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 54-ஆக அதிகரித்தது. இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...