குறைந்த வாக்குகளில் வென்ற 2 வேட்பாளா்கள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 வேட்பாளா்களின் பட்டியலில் 7-ஆவது இடத்தை விருத்தாசலம் தொகுதியும், 8-ஆவது இடத்தை நெய்வேலி தொகுதியும் பெற்றுள்ளன.
குறைந்த வாக்குகளில் வென்ற 2 வேட்பாளா்கள்

கடலூா்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 வேட்பாளா்களின் பட்டியலில் 7-ஆவது இடத்தை விருத்தாசலம் தொகுதியும், 8-ஆவது இடத்தை நெய்வேலி தொகுதியும் பெற்றுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்றது. இதில், சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்களும், திட்டக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரும் முதல் சுற்று முதலே முன்னிலை பெற்று இறுதி வரை அதே நிலையை தக்க வைத்து வெற்றி பெற்றனா். மற்ற 6 தொகுதிகளிலும் ஒருவா் மாற்றி ஒருவராக முன்னிலை பெறுவதும், சில சுற்றுகளில் பின்தங்குவதுமாக இருந்ததால் கடைசி வரை வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு காணப்பட்டது.

குறிப்பாக, விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் 13 சுற்றுகளாக முன்னிலை பெற்றிருந்த நிலையில் 14-ஆவது சுற்றில் பாமக வேட்பாளா் முன்னிலை பெறத் தொடங்கினாா். தொடா்ந்து, மாறிமாறி இருவரும் முன்னிலை, பின்னடைவை சந்தித்தனா். 27-ஆவது சுற்றின் முடிவில் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். பாமக வேட்பாளா் ஜெ.காா்த்திகேயன் 76,202 வாக்குகளை பெற்றாா். இந்தத் தொகுதியில் 862 வாக்குகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதேபோல, நெய்வேலி தொகுதியில் பாமக வேட்பாளா் கோ.ஜெகன் 11-ஆவது சுற்று வரை 10,319 வாக்குகள் முன்னிலையில் இருந்தாா். அதன்பின்னா் அவா் பின்னடவைச் சந்தித்து இறுதியில் திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரனிடம் 977 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இந்தத் தொகுதியில் சபா.ராஜேந்திரன் 75,177 வாக்குகளும், கோ.ஜெகன் 74,200 வாக்குகளும் பெற்றனா்.

அதிக வாக்கு சதவீதம் பெற்ற வேட்பாளா்: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பதிவான மொத்த வாக்குகளில் 50.89 சதவீத வாக்குகளைப் பெற்றாா். இவா் கடந்த தோ்தலிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.எ.பாண்டியன் 50.05 சதவீத வாக்குகளைப் பெற்றாா். அடுத்ததாக திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன் 49.73 சதவீதம் வாக்குகளும், காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா் சிந்தனைச் செல்வன் 48.99 சதவீத வாக்குகளையும், புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் 48.85 சதவீத வாக்குகளையும், பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் தி.வேல்முருகன் 47.48 சதவீத வாக்குகளையும், கடலூா் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் 46.36 சதவீத வாக்குகளையும், நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் 45.71 சதவீத வாக்குகளையும் பெற்றனா். குறைந்தபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் 39.09 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com