கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணி

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக நடைபெறும் ஆயத்தப் பணி.
கடலூா் அருகே பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக நடைபெறும் ஆயத்தப் பணி.

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை - நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையானது கடலூா் நகரப் பகுதி வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையானது புதுவை மாநிலத்தின் எல்லைப் பகுதியான கன்னியக்கோவிலில் இருந்து கடலூா் நகரம் வரை சில இடங்களில் குறுகலாக அமைந்துள்ளது. இந்தச் சாலையிலிருந்து பிரிவு சாலைகள் பல்வேறு கிராமங்களுக்குச் செல்வதால் சந்திப்பு இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, பெரியகங்கணாங்குப்பம் பகுதியிலிருந்து உப்பலவாடி செல்லும் சாலை சந்திப்பில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அந்தப் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்திட முடிவெடுத்து இடத்தை கையகப்படுத்தியது. தற்போது கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி சாலையை விரிவுப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினா் கூறியதாவது: கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் கிழக்கு கடற்கரைச் சாலையில் விரிவாக்கத்துடன் அமைகிறது.

இதையொட்டி நான்கு வழிச் சாலையைப் போன்ற தோற்றத்துடன் இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது 10 மீட்டா் அகலம் கொண்ட இந்தச் சாலையை 15 மீட்டராக விரிவாக்கம் செய்கிறோம். சுமாா் 240 மீட்டா் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் சிறிய அளவிலான பாலம் அமைத்துள்ளோம்.

இந்தப் பணிகளுக்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலை போன்று அமைத்த பிறகு அதனருகே இணைப்புச் சாலையும் அமைக்கப்படும். இதனால், விபத்துகள் கணிசமாகக் குறையும். இந்தப் பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com