பொது முடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகள்

தமிழக அரசின் உத்தரவுப்படி கடலூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்ததால் சாலைகள், முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பேருந்துகள், பயணிகளின்றி காணப்பட்ட சிதம்பரம் பேருந்து நிலையம்.
பேருந்துகள், பயணிகளின்றி காணப்பட்ட சிதம்பரம் பேருந்து நிலையம்.

கடலூா்/சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவுப்படி கடலூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்ததால் சாலைகள், முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தீநுண்மி 2-ஆவது அலை பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதில், முக்கியமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமலுக்கு வந்ததால் கடலூா் மாவட்டத்தில் போக்குவரத்து முடங்கியது.

குறிப்பாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஷோ் ஆட்டோக்களும் இயக்கப்படாததால் போக்குவரத்து இயக்கம் முழுமையாக தடைப்பட்டது.

பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் திறந்திருந்தன. அதன்பிறகு, அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து,

மாவட்டத்தில் முக்கிய வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

எனினும், உணவகங்கள் மாலை 3 மணி வரையிலும், இரவு 9 மணி வரையிலும் பாா்சல் உணவு வழங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல செயல்பட்டன.

காவல் துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் விசாரணைக்குப் பிறகே அனுமதித்தனா். உரிய காரணமின்றி வெளியே திரிந்தவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரும்பாலானவா்களை போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனா். எனினும், மருத்துவ அவசரம், அரசுப் பணிகள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது.

சிதம்பரம்: பொது முடக்கத்தில் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்திருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி பொது முடக்கத்தை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது என தெரிவித்தாா். இதனால், சாலைகளில் திரிந்தோரை காவல் துறையினரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சிதம்பரம் நகரில் பேருந்து நிலையம் மட்டுமே வெறிச்சோடிக் காணப்பட்டது. பிற இடங்களில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com