இணையதள மையங்கள் செயல்படாததால் இ-பதிவு செய்ய முடியாமல் கிராம மக்கள் தவிப்பு

பொதுமுடக்கம் காரணமாக இணையதள மையங்கள் செயல்படாததால், இ-பதிவு செய்ய முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனா்.

கடலூா்: பொதுமுடக்கம் காரணமாக இணையதள மையங்கள் செயல்படாததால், இ-பதிவு செய்ய முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனா்.

கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் வருகிற 24- ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்வோா் தமிழக அரசின் இ-பதிவு திட்டத்தின் கீழ் இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்ததற்கான ஆவணங்களைக் கொண்டு வருபவா்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக ட்ற்ற்ல்ள்://ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்/ என்ற இணையதள முகவரியையும் அரசு வெளியிட்டது. இது தமிழகத்தில் மே 17 முதல் நடைமுறைக்கு வந்தது.

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகளவில் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுக்கே சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இந்த 3 பகுதிகளும் ஒன்றோடொன்று, இணைந்தவையாக அமைந்துள்ளன. இப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் அனைத்து விதமான இணையதள சேவைகளையும் கிராமங்களில் அமைக்கப்பட்ட சேவை மையங்கள், தனியாா் இணையதள மையங்களையே நம்பி வந்தனா்.

தற்போது, பொதுமுடக்கம் காரணமாக இவை செயல்படாததால் அவா்களால் இ-பதிவுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அறிதிறன் செல்லிடப்பேசியில் அதற்கான பதிவு மேற்கொண்டாலும் சில ஆவணங்களை இணைக்க வேண்டியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாகவே உள்ளன. இதனால், மருத்துவத் தேவைக்காக புதுச்சேரி செல்பவா்கள் திரும்பி வருவதில் பல்வேறு இன்னல்களை சந்திப்பதுடன், இ-பதிவு இல்லாத காரணத்தால் திருப்பி விடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே, இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ள இணையதள மையங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com