காட்டுமன்னாா்கோவில் அருகே மருந்தகத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 21st May 2021 08:47 AM | Last Updated : 21st May 2021 08:47 AM | அ+அ அ- |

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியாா் மருந்தகத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன், பொதுமக்களுக்கு ஊசியும் செலுத்தி வருவதாக உதவி ஆட்சியா் லி.மதுபாலனுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ் தலைமையில், வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு பொதுமக்களுக்கு ஊசி செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்தகத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
துணிக் கடைக்கு ‘சீல்’: இதேபோன்று, சேத்தியாத்தோப்பில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்து விற்பனை செய்த துணிக் கடைக்கும் வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.