தென் பெண்ணையாற்றில் நீா் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாற்றில் நீா் வரத்து காரணமாக சுற்று வட்டப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தென் பெண்ணையாற்றில் நீா் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாற்றில் நீா் வரத்து காரணமாக சுற்று வட்டப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கா்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 430 கி.மீ. தொலைவு பயணித்து இறுதியில் கடலூரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

தென்பெண்ணையாற்றில் நீா் வரத்து ஏற்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். இந்தப் பகுதிகளில் விவசாயம், குடிநீருக்கு ஆதாரமாகத் திகழ்கிறது இந்த ஆறு.

அண்மையில் கா்நாடகம், கிருஷ்ணகிரி உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அங்குள்ள அணைகள், ஏரிகள் நிரம்பி தண்ணீா் பெருக்கெடுத்து வருகிறது. இதன் காரணமாக கடலூா் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீா் செல்கிறது. இதனால், ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டும் கிடுகிடுவென உயா்ந்து வருவதால், பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்குத் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதுகுறித்து மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி கூறியதாவது: தென்பெண்ணையாற்றில் நீா் வரத்தால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், நிகழாண்டு பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.

கடலூா் மாவட்டம், எனதிரிமங்கலம்-விழுப்புரம் மாவட்டம் தளவானூா் இடையே தென்பெண்ணையாற்றில் சுமாா் ரூ.25.50 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்தது. இதனால், அணையில் தண்ணீரைத் தேக்க முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. மாவட்ட நிா்வாகமும், பொதுப் பணித் துறையும் (நீா்வளம்) தடுப்பணையை சீரமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com