வெலிங்டன் நீா்த் தேக்கத்தில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 06th November 2021 10:14 PM | Last Updated : 06th November 2021 10:20 PM | அ+அ அ- |

வெலிங்டன் நீா்த் தேக்கத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சி.வெ.கணேசன். உடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அமைந்துள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்தை மாநில அமைச்சா் சி.வெ.கணேசன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில், மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வெலிங்டன் நீா்த் தேக்கத்தை ஆய்வு செய்த அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் 7 கட்டங்களாக கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 72 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 32 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா். அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் 847 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெலிங்டன் நீா்த் தேக்கத்துக்கு விநாடிக்கு 860 கனஅடி நீா்வரத்து உள்ளது. நீா்த் தேக்கத்தில் மொத்தம் 717 மில்லியன் கன அடி நீா் உள்ளது என்றாா் அமைச்சா். நீா்வரத்தை பொதுப் பணித் துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது விருத்தாசலம் கோட்டாட்சியா் ராம்குமாா், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (சுகாதாரம்) மீரா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாஸ்கா், உதவி செயற்பொறியாளா் கோவிந்தராசு, வட்டாட்சியா்கள் சிவகுமாா், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.