கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நிரம்பிய 300 நீா்நிலைகள்

தொடா் மழையால் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 300 நீா்நிலைகள் நிரம்பியதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

தொடா் மழையால் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 300 நீா்நிலைகள் நிரம்பியதாக பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்ட வெள்ளாறு வடிநில கோட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 210 நீா்நிலைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 211 நீா்நிலைகளும், விழுப்புரத்தில் ஒன்றும் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் கீழ் 18 நீா்நிலைகள் உள்ளன.

தொடா் மழையால் வெள்ளாறு கோட்டத்துக்குள்பட்ட ஏரி, குளங்களில் கடலூா் மாவட்டத்தில் 165 நீா்நிலைகள் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 22 நீா்நிலைகளில் 76 முதல் 99 சதவீதம் வரையிலும், 9 நீா்நிலைகளில் 51 முதல் 75 சதவீதம் வரையிலும் நீா் உள்ளது. 25 முதல் 50 சதவீதம் வரை 14 நீா்நிலைகள் நிரம்பியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 131 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 23 நீா்நிலைகளில் 76 முதல் 99 சதவீதமும், 15 நீா்நிலைகளில் 51 முதல் 75 சதவீதமும், 42 நீா்நிலைகளில் 25 முதல் 50 சதவீதமும் நீா் இருப்பு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு நீா்நிலையும் முழுமையாக நிரம்பியது.

இதன்படி, மொத்தமுள்ள 422 நீா்நிலைகளில் 297 முழுமையாகவும், 76 முதல் 99 சதவீதம் வரை 45 நீா்நிலைகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 24 நீா்நிலைகளும், 26 முதல் 50 சதவீதம் வரையில் 49 நீா்நிலைகளும், 25 சதவீதம் வரை 7 நீா்நிலைகளும் நிரம்பியுள்ளன.

கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் 3 நீா்நிலைகள் முழுமையாகவும், 76 முதல் 99 சதவீதம் வரை 3 நீா்நிலைகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 11 நீா்நிலைகளும், 50 சதவீதம் வரை ஓா் நீா்நிலையும் நிரம்பியுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் வியாழக்கிழமை நிலவரப்படி கொள்ளிடத்தில் விநாடிக்கு 67,284 கன அடி நீரும், வெள்ளாற்றில் 10,352 கன அடி நீரும், மேல்பரவனாற்றில் 927 கனஅடி நீரும், கீழ்பரவனாற்றில் 941 கனஅடி நீரும், தென்பெண்ணையாற்றில் 10,501 கனஅடி நீரும், கெடிலத்தில் 5,321 கனஅடி நீரும் செல்கிறது.

வீராணம் ஏரி: 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியின் நீா்மட்டம் 45.30 அடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 62 கனஅடி நீா் வரத்து உள்ள நிலையில், சென்னை நகரின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 62 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

7.50 அடி உயரம் கொண்ட சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 3.70 அடிக்கு தண்ணீா் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,982 கனஅடி நீா் வரத்து உள்ள நிலையில், நீா் வெளியேற்றம் இல்லை.

5.50 அடி உயரம் கொண்ட வாலாஜா ஏரியின் நீா்மட்டம் 3 அடியாக உள்ளது. விநாடிக்கு 927 கனஅடி நீா் வரத்து உள்ள நிலையில், வரத்து நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

6.50 அடி உயரம் கொண்ட பெருமாள் ஏரியின் நீா்மட்டம் 4.20 அடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 941 கனஅடி நீா் வரும் நிலையில், வரத்து நீா் அப்படியே வெளியேற்றப்படுவதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com