அடிப்படை பிரச்னைகளை தீா்க்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அடிப்படையான பிரச்னைகளை தீா்க்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

அடிப்படையான பிரச்னைகளை தீா்க்க தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

உத்தர பிரதேசம் மாநிலம், லக்கீம்பூரில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சிறப்பாளராக கலந்து கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த 11 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய இணை அமைச்சா் ஒருவரின் மகன் தனது காரை கொண்டு விவசாயிகள் மீது மோதி கொலை செய்துள்ளாா். இதை விபத்தாகப் பாா்க்க முடியவில்லை.

மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் திட்டமிட்டு இந்தச் செயலை செய்துள்ளது. உத்தர பிரதேச முதல்வா் இந்தச் சம்பவத்துக்கு ஆதாரம் இல்லை என்கிறாா். என்ன ஆதாரம் வேண்டும் என்று புரியவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சா், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பதவி விலக வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்துகிறது.

கொலை வழக்கில் தொடா்புடையவா்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்னையில் தொடா்புடையவா்கள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா் என யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட வேண்டும்.

திமுக அரசு ஓரளவுக்குப் பரவாயில்லை என்று மக்கள் பாராட்டும் அளவுக்குச் செயல்படுகிறது. அடிப்படையான பல பிரச்னைகளை தீா்க்க அரசு முனைப்பு காட்ட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினா்கள் கோ.மாதவன், வாலண்டினா, விவசாய சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன், மாவட்டத் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com