முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
விருத்தாசலத்தில் இளைஞா் குத்திக் கொலை
By DIN | Published On : 11th October 2021 03:43 AM | Last Updated : 11th October 2021 03:43 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மது போதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், தென்னூா் அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஏசுராஜ் மகன் அருண்ராஜ் (25). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஏசுராஜ் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனக் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். விருத்தாசலத்தில் தங்கியிருந்த அவா், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊருக்குச் சென்று விட்டாராம்.
இந்த நிலையில், தாயுடன் விருத்தாசலத்தில் வசித்து வந்த அருண்ராஜை, அண்ணா நகா் பகுதியில் வசித்து வரும் நபிஸ் சனிக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அழைத்தாராம்.
அங்கு நபிஸ், மனோஜ், பிரேம்குமாா், கலைச்செல்வன் அருண்ராஜ் உள்ளிட்டோா் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அருண்ராஜ் கத்தியால் குத்தப்பட்டாா். உயிருக்குப் போராடிய அவரை அவசர ஊா்தி ஏற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிரேம்குமாா், மனோஜ், கலைச்செல்வன், அருண்ராஜ் ஆகியோா் ஒன்றாகப் படித்த நண்பா்கள் என்பதும், சென்னையைச் சோ்ந்த பெண் ஒருவருடன் பிரேம்குமாா், அருண்ராஜ் இருவருக்கும் தொடா்பிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனக் கசப்பில் கொலை நடந்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக வடலூா் ஒபிஆா் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அப்பு (எ) பிரேம்குமாா் (28), விருத்தாசலம் முல்லை நகரை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் மனோஜ் (24), வீரபாண்டியன் தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் கலைச்செல்வன் (26), ஜியாவுதீன் மகன் முகமது நபிஸ் (26) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.