ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பொருள்களை இருப்பில் வைக்கலாம்: கடலூா் விற்பனைக் குழு செயலா்
By DIN | Published On : 13th October 2021 09:10 AM | Last Updated : 13th October 2021 09:10 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இருப்பில் வைக்கலாம் என்று கடலூா் விற்பனைக் குழு செயலா் (பொ) மு.ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழு சாா்பில் கடலூா் முதுநகா், விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திருமுட்டம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், 5 உழவா் சந்தைகளும் செயல்பட்டு வருகின்றன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 30,100 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் உள்ளன. இங்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை 15 நாள்களுக்கு இலவசமாக வைத்துக் கொள்ளலாம்.
பின்னா், விவசாயிகளின் விருப்பத்தின்பேரில் 180 நாள்கள் வரையிலும், நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 10 பைசா வாடகையில் வைத்துக்கொள்ளலாம். அதிக விலை கிடைக்கும்போது விளைபொருள்களை விற்பனை செய்துகொள்ளலாம். உடனடி பணத் தேவைக்காக பொருள்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை கடன் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தராசு, உலா்களம், விளைபொருள்களுக்கு இலவச காப்பீடு போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.