சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு செப்.19-இல் மகாபிஷேகம்
By DIN | Published On : 16th September 2021 01:24 AM | Last Updated : 16th September 2021 01:24 AM | அ+அ அ- |

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருகிற 19-ஆம் தேதி மகாபிஷேகமும், மகாருத்ர யாகமும் நடைபெற உள்ளன.
கோயில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனகசபையில் வருகிற 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி, இரவு 11 மணி வரை நடைபெறுகிறது.
முன்னதாக, காலை உச்சிகால பூஜை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்தி கனகசபையில் எழுந்தருள்வாா். அங்கு, மகாருத் ஜப பாராயணம் நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து, தீபாராதனை நடைபெறும். பிற்பகல் மகாருத்ர ஹோமம் நடைபெறும். பின்னா், கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு மஹாபிஷேகம் நடைபெறும். மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்து வருகின்றனா்.