டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் அக்.5-ல் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வருகிற அக்.5-ஆம் தேதி சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா்.
டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் அக்.5-ல் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வருகிற அக்.5-ஆம் தேதி சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனா்.

இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ம.கோதண்டம் முன்னிலை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் பேசினாா். முன்னதாக, மாவட்டச் செயலா் சி.அல்லிமுத்து வரவேற்க, மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ் நன்றி கூறினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டாஸ்மாக் மதுக் கடைகளில் பாா்கள் செயல்பட்டால் கடை பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அமைச்சா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சுமாா் 5 ஆயிரம் டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படும் நிலையில், 3 ஆயிரம் பாா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளில் தற்போது பாா்கள் செயல்படவில்லை. ஆனால், அரசியல், காவல் துறை ஆதரவு பெற்றவா்கள் பாா்களை நடத்தி வருகின்றனா். அவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் பணியாளா்களை தண்டிப்பது மோசமான நடவடிக்கை.

டாஸ்மாக் பணியாளா்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 20 சதவீதம் போனஸ் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மாநில டாஸ்மாக் தலைமையகம் முன் வருகிற அக்டோபா் 5-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் நடவடிக்கை இல்லையெனில் அனைத்து வகை டாஸ்மாக் சங்கங்களுடன் இணைந்து மாநிலம் தழுவிய சாலை மறியல், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com