கடலூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை

கடலூா் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் யூரியா உரம் கிடைக்காத நிலையில், தனியாா் நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.

கடலூா் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் யூரியா உரம் கிடைக்காத நிலையில், தனியாா் நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள 14 வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் காணொலிக் காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அனைத்து துறை முதன்மை அதிகாரிகள் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோ.மாதவன் கூறியதாவது: போலி விதை நெல் குறித்து தொடா்ந்து ஆய்வு நடத்த வேண்டும். குமராட்சி ஒன்றியத்தில் முதலைகளால் ஏற்படும் மனித உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் யூரியா உரம் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வீராணம் ஏரியிலிருந்து திறப்பதுடன், தேவையான விதை நெல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். இதேபோல, விவசாயிகள் பலா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் தடையின்றி இருப்பு வைக்கப்படும். நிவா், புரவி புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டு விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பயிா்க் காப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் அளித்தால் 15 நாள்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகாா் அளிக்கலாம்: கடலூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவது குறித்து புகாா் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உரத் தட்டுப்பாடு, பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பனை போன்றவற்றைத் தடுக்க மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 317 தனியாா் மற்றும் 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையகங்கள் மூலம் பல்வேறு வகையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் யூரியா உரங்கள் சரிவர கிடைப்பதில்லை என்றும், தட்டுப்பாடு இருக்கும் சமயங்களில் சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் அளிக்கின்றனா்.

உரங்களின் விற்பனை, விநியோகம் போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக விவசாயிகள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ உரக் கண்காணிப்பு பிரிவை தொடா்பு கொண்டு தீா்வு காணலாம். இதன்படி கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை 04142-290658 என்ற எண்ணிலும், தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநரை 90871 57057 என்ற எண்ணிலும், தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு வேளாண்மை அலுவலரை 87543 86163 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com