புதிய வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு: பல்வேறு இடங்களில் சாலை மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டனா்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தனா். இந்த அமைப்பினா் திங்கள்கிழமை ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்று அறிவித்தனா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காட்டுமன்னாா்கோவில், புதுப்பேட்டை, காடாம்புலியூா், நெய்வேலி, பெண்ணாடம் உள்பட 24 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், சிதம்பரத்தில் ரயில் மறியலும் நடைபெற்றது. இதில், பங்கேற்ற கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன், காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி உள்பட 1,623 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், புவனகிரி, கடலூா் முதுநகா் ஆகிய இடங்களில் பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. பெரிய ஜவுளிக்கடை, வணிக நிறுவனங்கள், நகைக் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com