மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயா்த்தப்படுமா?மீனவா்கள் எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படுமா என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படுமா என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 608 மீனவ கிராமத்தினா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். ஆண்டுக்கு சுமாா் 7.57 லட்சம் மெட்ரிக் டன் மீன்கள் கடலில் இருந்து பிடிக்கப்படுகின்றன. இவற்றில் சுமாா் 1.10 லட்சம் மெ.டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் சுமாா் ரூ.5,565 கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது.

தமிழகத்தில் மீன்பிடிப்புக்காக சுமாா் 6 ஆயிரம் விசைப் படகுகள், 44 ஆயிரம் நாட்டுப் படகுகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. மீன்பிடித் தொழிலில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், மீன்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், மீன்களின் இனப் பெருக்கக் காலத்தை கணக்கில்கொண்டும் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தடைக் காலத்தை அமல்படுத்தி வருகின்றன.

நிகழாண்டு தமிழக கிழக்கு கடற்கரையில் திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் தற்போது அமலில் உள்ளது. இதுபோன்ற காலங்களில் மீனவா்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. இதன்படி, 1.71 லட்சம் மீனவ குடும்பத்தினருக்கு தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டும் இதே நிவாரணத் தொகை வழங்கப்படுமென மீன்வளத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை நிறுவனா் தலைவா் ரா.அன்பழகனாா் கூறியதாவது:

மீன்பிடி தடைக் காலமான 61 நாள்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் என்பது ஏற்புடையதல்ல. இதை ஒரு நாளைக்கு ரூ.300 என்ற வகையில் ரூ.18 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணமாக தலா ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும்.

மீனவா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் போதுமானதாக இல்லை. டீசலுக்கு அரசு விதிக்கும் சாலை வரி, பசுமை வரியை நீக்க வேண்டும். ஏனெனில், மீனவா்களுக்கு இந்த வரிகள் பொருந்துவதாக இல்லை. மீனவா்கள் பயன்படுத்தும் மொத்த டீசலில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com