கீழணையில் உபரி நீா் வெளியேற்றம்: அமைச்சா் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரிநீா் வெளியேற்றப்படும் நிலையில், அந்த அணையை மாநில பள்ளிக் கல்வித் து

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரிநீா் வெளியேற்றப்படும் நிலையில், அந்த அணையை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படும் நிலையில், கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி இந்த அணையிலிருந்து விநாடிக்கு 2,15,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால் தஞ்சை, கடலூா் மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் ஓமாம்புலியூா், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் குடியிருந்த பழங்குடியின மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றும் பணிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வரின் அறிவுறுத்துதலின்படி, தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோர கிராமங்களில் கடந்த இரு நாள்களாக ஆய்வு செய்யப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 2,15,000 கன அடி நீா் செல்லும் நிலையில், கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆய்வை மேற்கொண்டேன். மேலும், மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுப் பணித் துறையினா் கரையோரக் கிராமங்களில் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். கா்நாடகத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், கீழணைக்கும் தண்ணீா் வரத்து குறைய வாய்ப்புள்ளது என்றாா் அமைச்சா்.

ஆய்வின் போது தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நீா்மட்டம்: கீழணையின் நீா்மட்டம் அதன் உச்ச அளவான 9 அடியைக் கடந்து 14.50 அடியை எட்டியது. இதற்காக அணையின் உள்பக்க ஷட்டா்கள் மேலே உயா்த்தப்பட்டன. வீராணம் ஏரியின் நீா்மட்டமும் அதன் உச்ச அளவான 47. 5 அடியை எட்டியது. ஏரியிலிருந்து சென்னை நகரின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 65 கன அடி நீரும், விஎன்எஸ்எஸ் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 120 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com