சமுதாய மீன் வளா்ப்பு மையங்கள் அமைக்க தேசிய மீன் மரபணு பேணகம் - அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

தேசிய மீன் மரபணு பேணகம் - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
சமுதாய மீன் வளா்ப்பு மையங்கள் அமைக்க தேசிய மீன் மரபணு பேணகம் - அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

சமுதாய மீன் வளா்ப்பு மையங்கள் அமைத்து கோமாளி மீன்கள் உற்பத்தி செய்வது தொடா்பாக தேசிய மீன் மரபணு பேணகம் - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

கடலூா் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் கோமாளி வகை மீன்கள் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கவும், அதற்கான ஆராய்ச்சித் திட்டத்தையும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை வழங்கி உள்ளது. பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள் ‘ராம்சாா்’ பட்டியலில் வெளியான நிலையில் மேற்கூறிய முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் உயராய்வு மையமானது கோமாளி மீன்கள் உற்பத்தியில் உலகளவில் சாதனை புரிந்துள்ளதாகவும், குறிப்பாக பவளப் பாறைகள் நிறைந்த பகுதியில் காணப்படும் கோமாளி மீன்களை கழிமுக நீரில் உற்பத்தி செய்யும் எளிய தொழில்நுட்பத்தை தயாரித்தது குறிப்பிடத்தகுந்த சாதனை எனவும் கருதப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு தேசிய மீன் மரபணு பேணகம், அண்ணாமலைப் பல்கலை. கடல் உயிரியல் உயராய்வு மையத்துடன் இணைந்து சமுதாய மீன் வளா்ப்பு மையங்கள் அமைப்பது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ராம.கதிரேசன், தேசிய மீன் மரபணு பேணக இயக்குனா் குல்திப் குமாா்லால் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதைப் பரிமாறிக்கொண்டனா் (படம்). நிகழ்ச்சியில் ஆராய்ச்சிக் குழு உறுப்பினா்கள் தி.த.அஜீத்குமாா், கதிா்வேல் பாண்டியன், கடல்வாழ் உயிரியியல் புல முதல்வா் அனந்தராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் .

இதுகுறித்து துணைவேந்தா் ராம.கதிரேசன் கூறியதாவது: இந்திய கடல் பகுதியில் 15 வகை கோமாளி மீன்கள் காணப்படுகின்றன. இந்த வகை மீன்களை சேகரித்து கடல் உயிரியல் உயராய்வு மைய பொரிப்பகத்தில் வைத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மீன்களை வளா்க்க பயனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், சமுதாய மீன் வளா்ப்பு மையங்கள் மத்திய அரசு உதவியுடன் அமைத்துத் தரப்படும். இங்கு வளா்க்கப்படும் மீன்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு, பயனாளிகளுக்கு சிறந்த வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com