கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்
By DIN | Published On : 04th January 2022 12:26 AM | Last Updated : 04th January 2022 12:26 AM | அ+அ அ- |

கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீா்.
மழை காரணமாக, கீழணைக்கு வரும் உபரி நீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு முக்கிய பாசன ஆதாரமாக கீழணை உள்ளது. உச்ச நீா்மட்டம் 9 அடியாக உள்ள இந்த அணையின் மூலம் கடலூா் மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களும், வடவாறு வழியாக பெறப்படும் தண்ணீா் வீராணம் ஏரியில் தேக்கப்பட்டு அதன்மூலம் சுமாா் 44 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீா்த் தேவைக்கும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கடந்த சில நாள்களாக பெய்த மழையால் கீழணைக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 4,362 கன அடி நீா் வந்தது. பாசனத்துக்கு தற்போது தண்ணீா் தேவைப்படாத நிலையில், அணையில் 8.5 அடிக்கு தண்ணீா் பராமரிக்கப்படுகிறது.
இதனால், கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 2,650 கன அடி வீதம் உபரி நீா் கடலுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், வடவாற்றில் விநாடிக்கு 1,100 கன அடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 318 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.