சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன், அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டது.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜீன் பாலி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜீன் பாலி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன்.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டது.

புது தில்லியில் உள்ள  இந்திய சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம்(IRRI) அலுவலகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், பிலிப்பைன்ஸின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சிசிஎஸ் ஹரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஜீன் பாலி, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். பின்னர் டாக்டர் ஜீன் பாலி தெரிவிக்கையில் இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.எம்.கதிரேசன், பல்கலைக் கழகத்தின் தொடர் முயற்சிகள், கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்காக  நன்றி தெரிவித்தார். மேலும் அவர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த நிறுவனங்களுக்கிடையில் ஒரு வலுவான கூட்டாண்மைக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
 
STRASA, EC-IFAD, IRRI-DBT மற்றும் GSR திட்டங்கள் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பத்தாண்டு கால கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் வெள்ளம் மற்றும் உப்பு பாதித்த பகுதிகளுக்கான உவர் மற்றும் வெள்ளம் தாங்கும் நெல் வகைகளையும் சிறந்த மேலாண்மை நடைமுறைகளையும் உருவாக்கி பரப்புவதில் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. 

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற பங்குதாரர்களுக்கான பயிற்சித் திட்டங்களில்  பணியாற்றியது. தொழில்நுட்ப பரிமாற்ற படிப்புகள் முதல் முதுகலை திட்டங்கள் வரை, இந்தியா முழுவதும் உள்ள விவசாய வல்லுனர்களின் திறனை வளர்க்க இக்கூட்டாண்மை உதவியுள்ளது.

இந்தியாவில் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும், கல்வி ஆராய்ச்சிக்கும் பண்ணை நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இயக்குநர் ஜெனரல் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன், உள்ளூர் சிறப்பு அரிசிக்கான மதிப்புச் சங்கிலி மேம்பாடு, அதிக மகசூல் தரக்கூடிய காலநிலை-எதிர்ப்பு அரிசி வகைகளை மேம்படுத்துதல், அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய மேலாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல கூட்டுத் திட்டங்களில் ஒத்துழைக்க IRRI எதிர்பார்க்கிறது. 

மேலும், உற்பத்தி தொழில்நுட்பத்திற்கான இலக்கு பகுதிகளை கண்டறிதல் மற்றும் விவசாயிகளுக்கு நிகழ்நேர வானிலை ஆலோசனைகளை வழங்குதல் போன்ற விவசாய விரிவாக்க சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த புவியியல் பகுப்பாய்வு மற்றும் மொபைல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை IRRI நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் நெல்ரக மேம்பாட்டு வலையமைப்பின் கீழ் பங்குதாரராக சேர்க்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அதிகமான மாணவர்கள் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்நிலை ஆராய்ச்சி செய்யப்படுவதை அறிவதோடு, தங்கள் படிப்பை முடிக்கும் போது இக்கூட்டாண்மையின் வெற்றிக்கு பங்களிக்க முடியும். 

மேலும், பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் பங்குதாரர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறு விவசாயிகளின் திறனை அதிகரிக்க இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என துணைவேந்தர் ராம.கதிரேசன் தெரிவித்தார்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com