திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்
திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருவதிகையில் பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் திரிபுர சம்ஹார வைகாசிப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான வைகாசிப் பெருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திரிபுர சுந்தரி, திரிபுர சம்ஹாரமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் திரிபுர சுந்தரி, திரிபுர சம்ஹாரமூா்த்தி சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டத்தில் அம்மன் தோ் முன்னே செல்ல, திரிபுர சம்ஹாரமூா்த்தி தோ் பின்தொடா்ந்து சென்றது. பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆனந்தி சரவணன், தில்லைக்கரசி ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா். சிவ வாத்தியம், மேள தாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

முப்புரம் எரித்த ஐதீக நிகழ்ச்சி: இரவு சுமாா் 7 மணியளவில் சிவபெருமான் முப்புரம் எரிக்கும் (திரிபுர சம்ஹாரம்) ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள், வீரட்டானேஸ்வரா் கோயிலில் எழுந்தருளி திரிபுர சம்ஹாரமூா்த்திக்கு சரம் (அம்பு) அளித்ததைத் தொடா்ந்து, மூன்று அரக்கா்களை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com