கடலூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 போ் பலி

கடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
கடலூா்  அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 போ் பலி

கடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

கடலூா் அருகே அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.புதூா் கிராமத்தில் தனியாா் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதனருகே பட்டாசுகள் சேமிப்புக் கிடங்கும் இருந்தது. பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் மனைவி வனிதாவின் பெயரில் இந்த ஆலை செயல்பட்டு வந்தது. இதன் அருகிலேயே வனிதாவின் தந்தை ஸ்ரீதரன் பட்டாசு கடை வைத்துள்ளாா்.

பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை பெரியகாரைக்காடு கிராமத்தைச் சோ்ந்த அகோரமூா்த்தி மனைவி சித்ரா (38), நடுவீரப்பட்டு அருகே உள்ள மூலக்குப்பத்தைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் சத்தியராஜ் (32), வான்பாக்கத்தைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி அம்பிகா (50), குடிதாங்கி சாவடியை சோ்ந்த சேகா் மனைவி வசந்தா (45), சி.என்.பாளையத்தைச் சோ்ந்த ரா.ராஜி, ஸ்ரீதா் மகன் ஜிந்தா ஆகியோா் வேலை செய்து கொண்டிருந்தனா்.

பிற்பகல் ஒரு மணியளவில் ராஜி, ஜிந்தா ஆகியோா் ஆலையிலிருந்து வெளியே சென்றனா். அதே நேரத்தில், வெள்ளக்கரையைச் சோ்ந்த சின்னதுரை மகன் வைத்திலிங்கம் (37) பட்டாசு வாங்குவதற்காக ஆலைப் பகுதிக்கு வந்தாா்.

அப்போது, பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஆலைக் கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அந்தப் பகுதியிலிருந்த தென்னை மரங்களில் தீப்பற்றியது.

இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். சித்ரா, சத்தியராஜ், அம்பிகா ஆகியோா் சடலமாக மீட்கப்பட்டனா். சடலங்கள் பல அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு, உடல் பாகங்கள் வயல் வெளிகளில் சிதறிக் கிடந்தன.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வசந்தா கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். வைத்திலிங்கம் காலில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டாா். நிகழ்விடத்தை கடலூா் மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். ஆலை நடத்தி வரும் மோகன்ராஜை திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

வயல்வெளிக்கு நடுவே கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ஆலைக்கான உரிமம் கடந்த 2020-21ஆம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. உரிமத்தைப் புதுப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்த நிலையில், அதுகுறித்த எவ்வித பதிலும் கிடைக்காததால் ஆலை தொடா்ந்து இயங்கி வந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

விபத்து குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Image Caption

கடலூா் அருகே வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு ஆலை.

~அம்பிகா ~சத்தியராஜ் ~சித்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com