தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்: கு.பாலசுப்பிரமணியன்

அன்மையில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலத்திலும் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு முதல்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்: கு.பாலசுப்பிரமணியன்

சிதம்பரம்: அன்மையில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலத்திலும் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்போவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நிர்வாக ரீதியாக கலந்துரையாடி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் குறிப்பாக நியாயவிலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த கருத்தை வரவேற்கிறோம். 

அதே வேளையில் அதே மாவட்ட  ஆட்சியர்கள் நியாயவிலைக் கடை வழங்கப்படும் அரிசி போன்ற பொருள்கள் ஆலைகளிலிருந்து குடோன்களுக்கு வரும் போதும், குடோன்களிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு வரும் போதும் ஆய்வு செய்வது சிறந்ததாகும். இதற்கான உத்தரவையும் முதல்வர் பிறப்பிக்க வேண்டும். இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்து குறை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும். மேல்மட்டத்தில் இருந்து தொடங்கக்கூடிய குறைகளை அனுமதித்துவிட்டு, கீழ் மட்டத்தில் உள்ள பணியாளர்களை மட்டும் ஆய்வு செய்வது ஏற்க இயலாது. 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனியாரிடம் இருந்த போது தேவைக்கு அதிகமாக பணியாளர்களையும், ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள். பொதுவாக தனியார் நிர்வாகம் குறைவான ஆட்களை வைத்து வேலை செய்வதுதான் வழக்கம். ஆனால் இங்கு என்ன காரணத்திலோ தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக நிதிசிக்கல் ஏற்பட்டு அரசே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசுடமையாக்கியது. 

அதில் பணியாற்றி வந்த ஆசிரியர்களையும், பணியாளர்களையும் தேவைக்கு அதிகமாக இருந்தவர்களை இதர அரசு கல்லூரிகளில், அரசு துறைகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி மாற்றம் செய்யப்பட்ட பணியாளர்கள் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எந்தெந்த துறைகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களோ அதே துறைகளில் பணி நிரந்திரம் செய்து, பதவி உயர்வுகளையும், மற்ற சலுகைகளையும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற விரும்பினால், விருப்பத்தின் பேரில் அவர்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பலாம். 

அரசு பணியாளர்களில், இரு வகை அரசு பணியாளர்கள் உள்ளனர். ஒன்று நிரந்திர பணியாளர்கள், மற்றொன்று தொகுப்பூதியம் உள்ளிட்ட நிரந்திரமல்லாத பணியாளர்கள்   மத்திய, மாநில அரசுகளில் உள்ளனர். அவர்களில் பலருக்கு ஓய்வூதியம் இல்லாத சூழல் உள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப படிகள் வழங்கப்படுவதில்லை. இதில் தமிழக முதல்வர் தலையிட்டு நிரந்திரமில்லாத பணியாளர்கள் ஊதியத்தை  உயர்த்துவதற்கும், 6 மாதம் ஒரு முறை அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம், அவர்களுக்கும் ஏதாவது ஒரு தொகையை அகவிலைப்படி  வழங்க வேண்டும். 

ஓய்வூதிய திட்டத்தையும் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் என்பது 2003-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஏறத்தாழ 18 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரி வருகிறோம். அன்மையில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலத்திலும் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்போவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். 

அரசு துறைகளில் முறைகேடுகள் குறித்து திங்கள்கிழமை அன்று ஒரு துறையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டு குற்றங்களை கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதற்கு அடிப்படை காரணம் அரசு பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல் ஆகிய 3 அம்சங்களில் சில குறைபாடுகள் உள்ளன. குறைபாடுகள் போக்கப்பட்டால், ஓட்டு மொத்தமாக சீராக செயல்பட்டு முதல்வரின் விருப்பப்படி சிறந்த நிர்வாகத்தை அடைய ஏதுவாக இருக்கும். 

போக்குவரத்துறையில் உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு மிகுந்த காலதாமதம் தொடர்ந்து வருகிறது. இதனால்தான் முறைகேடுகள் ஏற்படுகிறது. தமிழக முதல்வர் பணிநியமனம், பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவற்றில் சிறந்த நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தால் வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாக மாறும். 

வருகிற மார்ச் 17-ம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை அளிக்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக வள்ளுவர் கோட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி பணியாளர்கள் இணைந்து முடிவு செய்து அதன் பிரதிநிதிகளாக முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து வலியுறுத்த உள்ளோம்.
 
எங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை அளிக்க முதல்வர் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இப்பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ஜெயசந்திரராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com