எட்டாக்கனியாகும் கரும்பு ஊக்கத்தொகை!

கரும்புக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குகிறது என்றால், மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிதம்பரம்: கரும்புக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குகிறது என்றால், மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால், அந்த ஊக்கத்தொகை கரும்பு விவசாயிகளைப் போய்ச் சேர்வதில்லை. இடைத்தரகர்களால் அபகரிக்கப்படுகிறது என்பதுதான் சோகம்.

நெல், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு ஆண்டுதோறும் பல்வேறு காரணங்களால் அதிகமானாலும், அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை ஓரளவு ஈடு செய்யும் விதமாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.  கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய அரசு ரூ.2,700 அறிவித்த நிலையில், தமிழக அரசு ரூ.195-ஐ ஊக்கத்தொகையாக அறிவித்தது. தமிழக அரசின் ஊக்கத்தொகை அறிவிப்பால் விவசாயிகள் பெருமளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். 

அதே நேரத்தில் நெல், கரும்பு விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, நெல் சாகுபடியில் இருப்பதுபோல, கரும்பு சாகுபடியிலும் இடைத்தரகர்களால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரும்பு வெட்ட போதிய வேலையாள்கள் கிடைக்காததால், இடைத்தரகர்கள் விவசாயிகளின் கரும்பை பேரம் பேசி வெட்டி, ஆலைகளுக்கு தங்களது பெயரில் அனுப்பிவைத்து அரசின் ஊக்கத்தொகையை அபகரித்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கரும்பு சாகுபடியைப் பொருத்தவரை, விதைக் கரும்பு நடுதல், களை எடுத்தல், பயிர் பராமரிப்பு, உரமிடுதல், சோகை கழித்தல், கரும்பு வெட்டுதல் என அனைத்துப் பணிகளுக்கும் வேலையாள்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் அதற்கு முக்கியமான காரணம். பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனம், அதனுடன் உரங்களை தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலையாள்கள் பற்றாக்குறையைச் சமாளித்தாலும், கரும்பு வெட்ட வேலையாள்கள் அவசியம் தேவை.

கடந்த காலங்களில் சர்க்கரை ஆலை நிர்வாகங்களே கரும்பு வெட்ட வேலையாள்களை ஏற்பாடு செய்து கொடுத்து, கரும்பு வெட்டிய பிறகு அவர்களுக்கான ஊதியத்தையும் வழங்கி வந்தன. இதனால், விவசாயிகளுக்கு கரும்பு வெட்டும் பணி எளிதாக இருந்தது.

தற்போது கரும்பு வெட்டும் வேலையாள்களை முழுமையாக இடைத்தரகர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தங்களை நாடி வரும் விவசாயிகளின் கரும்புகளை மட்டும் வெட்டி ஆலைக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனுபவம் வாய்ந்த கரும்பு வெட்டும் வேலையாள்களுக்கு இடைத்தரகர்கள் கூடுதல் முன்பணம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளனர். இதனால், விவசாயிகள் கரும்பு வெட்டும் தொழிலாளர்களை நேரடியாக அணுக முடியாமல், இடைத்தரகர்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள் கரும்பு வெட்டுக் கூலி, ஏற்றுக் கூலி, வண்டி வாடகை என அனைத்தையும் தாங்களே பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார்கள். விவசாயிகளிடம் கரும்பு டன்னுக்கு ரூ.1,500 கொடுத்துவிடுவதாக பேரம் பேசி, அவர்களின் கரும்பை வெட்டி தங்கள் பெயரிலேயே ஆலைகளுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். ஆலையிலிருந்து கரும்பு அனுப்பியதற்கான பணம் வந்தவுடன் விவசாயிகளிடம் பேரம் பேசியபடி, டன்னுக்கு ரூ.1,500 வீதம் வெட்டப்பட்ட மொத்த கரும்புக்கும் கொடுத்து விடுகின்றனர்.


விவசாயிகள் பயிர் செய்த கரும்பை வெட்டி, இடைத்தரகர்கள் தங்கள் பெயரில் ஆலைகளுக்கு அனுப்புவதால், தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை பயிர் செய்த விவசாயிகளுக்கு கிடைக்காமல் இடைத்தரகர்களுக்கு போய் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாடுபட்டு உழைத்த விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய ஊக்கத்தொகை கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர் பி.ரவீந்திரன் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட காட்டுமன்னார்குடி, திருமுட்டம் பகுதிகளில் இதுபோன்ற 10-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் தற்போது கரும்பு முகவர்களாக மாறி, விவசாயிகளிடம் கரும்பை விலை பேசி வாங்கி தங்களது பெயர்களில் ஆலைகளுக்கு அனுப்பிவைத்து, அரசின் ஊக்கத்தொகையை அபகரிப்பது வேதனையளிக்கிறது. இதுபோன்ற குற்றச் செயலுக்கு கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இயங்கும் கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களும் துணைபோகின்றன.

கரும்பு இடைத்தரகர்கள் ஒவ்வொருவரும் தலா 5 ஆயிரம் டன் முதல் 8 ஆயிரம் டன் வரை தங்களது பெயர்களில் விவசாயிகளின் கரும்பை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, விவசாயிகளுக்கு சேர வேண்டிய ஊக்கத்தொகையை அபகரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, வேளாண், சர்க்கரைத் துறையின் மூலம் விரிவான விசாரணைக்கு உள்படுத்தி, கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ஊக்கத்தொகையை அந்தந்த விவசாயிகளுக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சர்க்கரை ஆலை நிர்வாகம் இடைத்தரகர்களிடம் கரும்பு கொள்முதல் செய்யத் தடை விதிக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக கரும்பை ஆலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மேலும், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கரும்பு வெட்டும் அனுபவம் வாய்ந்த வேலையாள்களை சர்க்கரை ஆலை நிர்வாகங்களின் கீழ் பணியமர்த்தி, கரும்பு விவசாயிகளின் பதிவு அடிப்படையில் கரும்பு வெட்டும் நடைமுறையை ஆலை நிர்வாகமே நேர்மையாகச் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலையும் முழுமையாகக் கிடைப்பதில்லை. தமிழக அரசின் ஊக்கத்தொகையும் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் அகற்றப்பட்டால்தான் கிடைக்க வேண்டிய பணம் முழுமையாகச் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com