பலா மகசூல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பலா மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பலா மகசூல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பலா மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தனிப் பயிராகவும், முந்திரிக் காடுகளுக்கு இடையே ஊடுபயிராகவும் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பண்ருட்டியில் கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலத்தில் விளையும் பலாப் பழங்களுக்கு மிகுந்த சுவை உண்டு.

நிகழாண்டு மழைப் பொழிவு சராசரியைவிட அதிகமாக இருந்த நிலையில், பலா மரங்கள் காலதாமதமாகவே காய்ப்பெடுத்தன. இடைக் காலத்திலும் மழைப் பொழிவு இருந்ததால் மகசூல் அதிகரித்து பண்ருட்டி பலா சந்தையில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பலா கமிஷன் மண்டிகளிலிருந்து பலாக் காய்கள் வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து பலாப்பழ விவசாயிகள் கூறியதாவது:

வழக்கமாக பலா மரங்கள் நவம்பா் மாதத்தில் காய்ப்பெடுக்கும். இந்த முறை ஒரு மாதம் தாமதமாகவே காய்ப்பு தொடங்கியபோதும், மரங்களில் அதிகளவு பிஞ்சுகள் இருந்தன. அவ்வப்போது மழைப் பொழிவும் இருந்ததால் காய்கள் திரட்சியாக பெருத்து காணப்பட்டன. இதனால், மகசூல் சிறப்பாக உள்ளது என்றனா்.

பலா கமிஷன் மண்டி நடத்திவரும் நடுபிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த ஏ.சுரேஷ் கூறியதாவது:

பண்ருட்டியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பலாப் பழங்களை அனுப்பி வைக்கிறோம். தற்போது பலா அறுவடை உச்ச நிலையை அடைந்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. காய்களின் தரமும் சிறப்பாக உள்ளது. சில்லறை விலையில் தரத்துக்கேற்ப ஒரு பழம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.350 வரை விற்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு ஒரு டன் ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை விற்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com